செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. திகில் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து 2017, ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
ஆனால், அதே ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்ததால், கேளிக்கை வரி குறித்து சிக்கல் எழுந்த நிலையில், படத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் பின்னர் படம் குறித்த எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இதனிடையே செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தச் சூழலில் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் செல்வராகவன் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், தனது பிறந்தநாளான மார்ச் 5 ஆம் தேதி 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் இருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்திற்கு எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.