ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய திரைப்படம் 'இனம்'. கரண், சரிதா, கருணாஸ், உகந்தா, ஷியாம் சுந்தர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள, இந்தப் படம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. பின்பு படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு, படம் வெளியானது. ஆனாலும் எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.
இதனைத் தொடர்ந்து படத்தின் விநியோகஸ்தரான இயக்குநர் லிங்குசாமி, படம் ரிலீஸான ஒருவாரத்திற்குள்ளேயே படத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதன்படி மார்ச் 31ஆம் தேதி முதல் திரையரங்குகள் அனைத்திலும் இருந்தும் 'இனம்' திரைப்படம் நிறுத்தப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை மீண்டும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநரான சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இனம் படத்தைப் பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக, விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ்நாடு அரசின் முதல் டேக்ஸ் ஃபிரி படம் இது. அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு 1997இல் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி மல்லி என்ற படத்தை சந்தோஷ் சிவன் இயக்கினார். டெரரிஸ்ட் என்ற பெயரில் அப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இனம் திரைப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புக்கு மல்லியும் ஒரு காரணம். படம் வெளியாகி 7 ஆண்டுகள் கழிந்த நிலையில், இனம் படத்தை ஓடிடியில் சந்தோஷ் சிவன் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.