சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா, சார்லி, ஆனந்தராஜ், ரவிமரியா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூர்க்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். ‘4 மங்கீஸ்’ ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கரு. பழனியப்பன், யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது சாம் ஆண்டன் கூறுகையில், கூர்க்கா படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் அனைத்தும் முடிந்த நிலையில் நடிகர் யோகி பாபுவை சந்தித்து பேசினோம். அப்போது அவர் கதை எதுவுமே கேட்காமல் எத்தனை நாட்களுக்கு தேதி வேண்டும் என்று கேட்டார்.
இந்த படம் நடிக்கும் போது யோகி பாபு எடை மிகவும் குறைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் எனக்காக அவர் படப்பிடிப்பில் மிகவும் கஷ்டப்பட்டார். யோகி பாபு இப்போது மிகவும் பிஸியான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதையும் தாண்டி அவர் ஒரு நல்ல ஆத்மா.
அதுமட்டுமின்றி கஷ்டபட்ட காலத்தில் உதவியவர்கள், உணவு அளித்தவர்கள் என்று அனைவருக்கும் உதவ விரும்புபவர். படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்துவிட்டால் விறுவிறுவென்று நடித்துக் கொடுத்து விடுவார்.
யோகி பாபு பேசுகையில், “சாம் ஆண்டன் என்னுடைய நண்பர் என் பெயர் என்ன என்ற படத்தின் மூலம் எனக்கு அறிமுகமாகி இன்றுவரை நாங்கள் நண்பர்களாக உள்ளோம்.
35 நாட்கள் நடிப்பில் உருவான ஒரு காமெடி படம்தான் கூர்க்கா. இந்த படத்தில் நடிப்பதற்குள் எனக்கு உயிர் போய்விட்டது. கதாநாயகனாக நடிப்பவர் எத்தனை கஷ்டப் படுகிறார்கள் என்பதே தெரிந்தது.
ஒரு காலத்தில் நான் இதே சத்யம் திரையரங்கின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். இன்று மேடையில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.