பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்ஆர்ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'இந்தியாவில் நிலவி வரும் கரோனா பாதிப்புகள் குறைந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை மார்ச் 18ஆம்தேதி வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இல்லையெனில் ஆர்ஆர்ஆர் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 28ஆம்தேதி வெளியாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட வெளியீடு தள்ளிச் செல்லுமோ எனும் அச்சத்தால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.15 கோடி மோசடி; தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு