'தர்பார்' படப் பிரச்னை தொடர்பாக சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தர்பார்' படம் விநியோகஸ்தர்கள் பிரச்னை தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் சிலர் சென்று பிரச்னை கொடுப்பதாக அவர் இயக்குநர் சங்கத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
ஒரு படத்தின் லாபம் நஷ்டம் எல்லாம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களிடம் தான் சேரும். முருகதாஸிடம் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. நஷ்டம் அடைந்தவர்கள், தயாரிப்பாளர் விடுத்து மற்றவர்களிடம் அத்துமீறி நடப்பவர்களுக்கு ஃபெப்சி சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
சுமூகமாக இருந்த திறைத்துறை தற்போது சிக்கலில் இருக்கிறது. முறையான அனுமதி பெற்று நடத்துகின்ற 'மாஸ்டர்' படப்பிடிப்பில் பாஜக போராட்டம் நடத்துவது முறையற்றது. தமிழ்நாட்டில் பிரச்னை என்றால் உடனே வெளிமாநிலம் சென்று படப்பிடிப்பு செய்யாதீர்கள். காரணமின்றி வெளி மாநிலத்தில் படப்பிடிப்பு வைத்தால் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு தொழிலாளர் சம்மேளம் எந்த உதவியும் செய்யாது.
சினிமா துறை கட்டுப்பாடு இல்லாத துறையாக மாறிவிட்டது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு பிலிம் கார்பரேஷன் என்ற அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
இந்தியாவின் வரப்பிரசாதமாக இருக்கும் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியே அனுப்புவது வருந்தத்தக்கது. பிரசாத் ஸ்டுடியோவை சினிமாவுக்காக அர்பணியுங்கள். அரசாங்கம் இதில் தலையிட்டு சுமூகமான முடிவை எட்ட வழிவகை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.