மும்பை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையைக் கிண்டலடிக்கும்விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா.
இது குறித்து அடுத்தடுத்து ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா, அனைத்து பதிவுகளின் இறுதியிலும் 'சும்மா பேச்சுக்கு' என்று குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்பை வரவேற்க இந்தியர்களாகிய நாம் பல ஆயிரம் கோடிகள் செலவுசெய்கிறோம். ஆனால் அமெரிக்கர்கள் நம் நாட்டு பிரதமர் மோடியை வரவேற்க சில ஆயிரமாவது செலவு செய்வார்களா?
இந்தியர்கள் ட்ரம்புக்காகக் கூடும் கூட்டத்தைப் பார்த்து, சாகும்வரை தற்பெருமை பேசிக்கொள்ளவே அவர் இங்கு வருகிறார். அவரது வருகையொட்டி 10 மில்லியன் வரை நமக்குத் திரும்பினால், 15 மில்லியன் நமக்கு கிடைக்கிறது என்று பொய் சொல்வார்கள்.
வெளிநாட்டுப் பிரமுகர்களை வரவேற்பதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவுசெய்வது, கடந்த காலங்களில் அமெரிக்க பின்பற்றிய நில உரிமை முறை நினைவுக்கு வருகிறது. ஆனால் நமது உள்ளார்ந்த அடிமைக் கலாசாரம் அதை ஒருபோதும் அனுமதிக்காது.
இந்திய கலாசார நிகழ்ச்சிகளைக் காணும் ட்ரம்பின் முகபாவனைகளைப் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஒவ்வொரு இந்தியனும் நமது கலாசார நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்களா எனத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மற்றவர்கள் இதைப் பார்த்து உற்சாகம் அடைவார்கள் என்று எதிர்பார்ப்பது சரியானதாக இல்லை.
வேறொரு நாட்டினரின் கலாசார நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு யாராவது அங்கு செல்வார்களா? பகல் நேரங்களில் ஊர் சுற்றவும், இரவு நேரங்களில் குதூகலமாக இருப்பதைத்தான் விரும்புவார்கள். எனவே பாலிவுட் இரவு பார்டிகளே இதற்குப் போதுமானது
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகக் கட்டப்பட்டிருக்கும், மொடீராவிலுள்ள சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தை திறந்துவைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார்.
இதனிடையே பிரபலங்கள் குறித்தும், அன்றாட நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது ட்விட்டரில் சர்ச்சையான கருத்துகளைப் பதிவிட்டு பலரிடம் திட்டு வாங்கிக்கொள்ளும் ராம்கோபால் வர்மா, தற்போது இந்த நிகழ்வை கலாய்த்துள்ளார்.