வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகர் ஆஃப்செட்டை பிரபல வணிக வளாகத்தில் போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பான விடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விடியோவில் மஞ்சள் நிறத்திலான ஸ்வெட்டர் அணிந்திருக்கும் ஆஃப்செட், தனது கையில் விலங்கு மாட்டிவிடும் போலீஸாரிடம் கேள்வி கேட்பது போல் காட்சிகள் உள்ளன. அப்போது போலீஸார் எதுவும் பேசாமல் அவரை அருகிலிருந்த சுவர் நோக்கி தள்ளுகின்றனர்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள க்ரூவ் வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் துப்பாக்கியுடன் இருந்த ஆஃப்செட்டை கையில் விலங்கு மாட்டி கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இரண்டு துப்பாக்கிகள் ஆஃப்செட் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேரிடமிருந்து கைபற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.