சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும் அதற்கு தமிழ் மக்கள் அளிக்கும் முக்கியத்துவம் என்பது அளப்பரியதாக உள்ளது. காரணம் அவர்கள் சினிமாவை தங்கள் வாழ்வியலுடன் தொடர்புபடுத்திக் கொள்வதோடு திரையில் தோன்றும் கலைஞர்களை தங்களின் சொந்தங்களாகவே பார்க்கின்றனர். சினிமா மீதான தமிழர்களின் இந்த ஈர்ப்பால்தான் எம்ஜிஆர் என்னும் திரை நட்சத்திரம் தமிழ்நாட்டு முதலமைச்சராக முடிந்தது.
ஒரு திரைப்படத்தில் பல நடிகர்கள் தோன்றினாலும் கதை என்பது கதாநாயகனை முன்னிலைப்படுத்தியே அமைந்திருக்கும். அதுபோல், திரையுலகில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு நடிகர் என்பவர் அனைவரின் விருப்பத்துக்குரியவராக இருப்பது சகஜமான ஒன்றுதான். இருப்பினும் அந்த நடிகர் தனது 70ஆவது வயதிலும் மாஸ் ஹீரோவாக நடித்து இளம் ஹீரோக்களுக்கு இணையான ஆதரவோடு வலம் வருகிறார் என்றால் அவரின் பெயர்தான் ‘ரஜினிகாந்த்’.
மைசூரில் பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பயணிகள் முன்பாக ஸ்டைல் செய்து கொண்டிருந்த சிவாஜி ராவ், ரஜினிகாந்தாக உருவெடுத்து தமிழ் சினிமாவின் உச்சத்தை அடைவதற்கு அடித்தளம் இட்டவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர்.
1975ஆம் ஆண்டு 'ஆபூர்வ ராகங்கள்' படத்தில் நடிகராக அறிமுகமான ரஜினி, நடிப்பில் நற்பெயரையும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். அதைத் தொடர்ந்து ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’ ஆகிய படங்களில் நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்த ரஜினி, வரிசையாக பாலசந்தர், கமல் ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஒரு நல்ல நடிகனாக தன்னை வளர்த்துக்கொண்டார். இதனிடையே கன்னட, தெலுங்கு படங்களிலும் அவர் தனது தடத்தை பதித்தார்.
பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’வில் பரட்டையாக பட்டைய கிளப்பிய ரஜினி, தொடர்ச்சியாக வித்தியாசமான கேரக்டர்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திவந்தார். பின்னர் 1978ஆம் ஆண்டு வெளியான பைரவி படத்தில் ஒரு முழுநேர ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அந்தப் படம் விளம்பரப்படுத்தப்பட்டபோதுதான் ரஜினியின் பெயருக்கு முன் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது.
அதன்பின் தமிழ் சினிமா தனக்கு அளித்த புகழை உணர்ந்த ரஜினிகாந்த், தொடர்ந்து ஜனரஞ்சகமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். மெல்லமெல்ல வளர்ந்த ரஜினி, ‘முள்ளும் மலரும்’ படத்திற்குப் பின் மக்களின் விருப்ப ஹீரோவாக இடம்பிடித்தார். ஏனெனில், அப்படத்தில் ரஜினி நடித்திருந்த காளி கதாபாத்திரத்தை இயக்குநர் மகேந்திரன் அத்துனை சாமர்த்தியமாக பயன்படுத்தியிருப்பார்.
எத்தனை படத்தில் நடித்தாலும் தனது நண்பரான கமலுடன் நடிப்பதை தொடர்ந்த ரஜினி, அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற படங்களில் நடித்தார். ரஜினியை திரையில் சரியாக பயன்படுத்திய இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், ஆறிலிருந்து அறுபது வரை என்ற படத்தில் ரஜினியின் மூலமாக ஒரு ஏழை அண்ணன், தனது குடும்பத்தைக் காப்பதற்காகப்படும் இன்னல்களை வெளிக்கொண்டு வந்திருப்பார்.
இப்போது சூப்பர் ஸ்டாராக தியேட்டர்களை அதகளப்படுத்தும் ரஜினிகாந்தின் நடிப்பை அப்படத்தில் பார்த்தால் அது யாராக இருப்பினும் அவர்களின் கண்களின் ஓரம் சிறிய ஈரம் எட்டிப்பார்க்கும். இப்படியான ரஜினியின் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால், அது 1980இல் வெளியான பில்லா தான். முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்ற ரஜினி, டேவிட் பில்லா என்ற டான் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.
தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்த ரஜினி, தில்லு முல்லு என்ற முழு நீள நகைச்சுவை படத்தில், தேங்காய் சீனிவாசனிடம் இரட்டை வேஷம் போட்டு மாட்டிக்கொண்டு அதை சமாளிக்க செய்யும் குறும்புகள் ரஜினியை ரசிகர்களிடம் மேலும் இணக்கப்படுத்தியது. தொடர்ந்து ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்த ரஜினியின் 100ஆவது படமாக ஸ்ரீ ராகவேந்திரர் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஒரு ஹீரோ அறிமுகமாகி பத்து ஆண்டுகளில் 100 படம் என்பது பெரிய சாதனையாகவே அப்போது பார்க்கப்பட்டது.
இப்படி தமிழ் திரையுலகை கலக்கிய ரஜினி, 90களின் தொடக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணைந்து தளபதி படத்தில் ஒரு ஆகச்சிறந்த நண்பனாக அசத்தியிருப்பார். பிறகு மன்னன், அண்ணாமலை, பாண்டியன், எஜமான், உழைப்பாளி என வரிசையாக கமர்ஷியல் படங்களை அளித்து தயாரிப்பாளர்களின் ஆஸ்தான ஹீரோவாக அவதாரமெடுத்தார்.
மேலும் முன்பிருந்ததைவிட தனது படங்களின் எண்ணிக்கையை ரஜினி குறைத்துக் கொண்டாலும் ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாட்ஷா, எப்பவுமே ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட் படமாக உள்ளது.
அப்போதிருந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் கூறியதால் முத்து, அருணாசலம், படையப்பா போன்ற படங்களில் சில அரசியல் வசனங்களையும் பறக்கவிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை அது வெறும் எதிர்பார்ப்பாகவேதான் உள்ளது என்பது தனிக்கதை!
2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆன்மீகத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட திடீர் காதலால், திரையுலக வாழ்க்கைக்கு அவர் முழுக்கு போட்டு விடுவார் என பயந்த அவரது ரசிகர்களுக்கு, சந்திரமுகி படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து உற்சாகமளித்தார். மீண்டும் ஒரு கேப்... ஆனால் இம்முறை தாறுமாறாக எண்ட்ரி... சிவாஜி படத்தில் நாட்டுக்கு நல்லது செய்ய துடிக்கும் படித்த தொழிலதிபாராக தோன்றிய ரஜினி, புதிய முயற்சிளை மேற்கொள்வதைத் தொடர்ந்தார். அதன் பயனாகவே எந்திரன், கோச்சடையான் போன்ற புதிய வடிவிலான படங்கள் வெளியானது.
உடல் நலக்கோளாறை சந்தித்தாலும் ஓயாது உழைத்த ரஜினி, நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக படங்களை அளித்து தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என 167 படங்களில் நடித்துள்ள ரஜினி அடுத்த படத்துக்கும் பூஜை போட்டு தயாராகிவிட்டார்.
ஒரு கலைஞன் பல மாறுபட்ட கலை விருந்துகளை அளிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பவர் ரஜினி. அதனாலேயே, ஆட்டோக்காரன், போலீஸ், டான், விஞ்ஞானி என வித்தியாசமான கேரக்டர்களையும், புதுமாதிரியான கதைக்களம் கொண்ட படங்களிலும் நடிப்பதை தவறாமல் செய்துவருகிறார். தமிழ் சினிமாவின் அடையாளமாக உயர்ந்த ரஜினிகாந்த், தனது 44 ஆண்டுகால திரைப்பயணத்தில் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை மட்டுமல்லாது உலக அளவில் இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாகவும் உள்ளார்.
யார் வந்தாலும் இங்கு எப்பவும் ரஜினியின் தர்பார் தான்... ஹேப்பி பர்த் டே சூப்பர் ஸ்டார்...