சென்னை: கட்சி தொடங்கி மக்களை தேடிச் சென்றால்தான் ரஜினி எழுச்சியை பார்க்க முடியும் என்று மூத்த பத்திரகையாளர் 'துக்ளக்' ரமேஷ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக 'துக்ளக்' ரமேஷ் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஜினி அடிப்படையில் மிக நல்ல நோக்கங்கள் கொண்ட நேர்மையான மனிதர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன் தான் விரும்பும் அரசியல் பாதை, காண விரும்பும் மாற்றங்கள் குறித்து உள்ளத்திலிருந்து பேசியுள்ளார். மனதில் பட்ட கருத்துகளை நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.
குறுக்கீடு இல்லாத நிர்வாகம் என்கிற அவரது சிந்தனை வரவேற்புக்குரியது. தமிழக மக்கள் அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தான் சொல்லும் வேட்பாளரை வைத்து நிறைவேற்றுவேன் என்று கூறியதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
கட்சி தொடங்கி மக்களை தேடிச் செல்லும்போதுதான் அவர் எழுச்சியை பார்க்க முடியும். ரஜினியை பார்க்க மக்கள் பெருமளவில் கூடுவார்கள். ஆனால் அவர் முதல்வர் வேட்பாளராக இல்லாமல் இன்னொருவரை அறிவிக்கும்போது பெறும் வரவேற்பை பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சூப்பர்ஸடார் ரஜினிகாந்த், மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்த பின்னர், அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்தார். அத்துடன் அரசியலில் தான் விரும்பும் மாற்றத்துக்கு முக்கியமான மூன்று திட்டங்களை விவரித்தார்.
இதையடுத்து ரஜினியின் கருத்துக்கு அரசியல் பிரபலங்கள் பலரிடமிருந்து தொடர்ந்து ஆதரவும் எதிர்ப்பும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதையும் படிங்க: அரசியலுக்கு வரமாட்டேன் என்றே கூறியிருக்கலாம் - ரஜினியை விமர்சித்த திருமாவளவன்