பாகுபலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 10) சென்னையில் நடைபெற்றது. இதில் ராஜமெளலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாடினர்.
அப்போது பேசிய ராஜமெளலி, "இந்தியாவிலேயே சிறந்த நடிகர்கள் இருக்கும்போது ஹாலிவுட் நடிகர்களை நான் தேட வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் கதை எழுதிவிட்டு கதாநாயகர்களைத் தேர்வுசெய்வேன். கதாநாயகர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு கதைகளைத் தேட மாட்டேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சென்னைக்கு வருவது, பள்ளி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், 'உங்களுக்கு ஹாலிவுட் படங்களை இயக்க வாய்ப்பு வந்திருக்கிறதா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராஜமௌலி, 'உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஹாலிவுட்டிலிருந்து பட வாய்ப்புகள் வரவில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் இந்தியக் கதைகளை உருவாக்கி நான் அவர்களுக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோலிவுட் சாக்லேட் பாய்க்கு பிறந்தநாள்