தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், வேளச்சேரி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் மழைபெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திருவண்ணாமலை, திருத்தணி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக தென்மேற்குப் பருவமழை காரணமாக சென்னை, நீலகிரி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.