இந்த ஆண்டு திரிஷாவுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் ‘96’ படம் வெளியாகி அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இத்தனை ஆண்டுகாலமாக திரைத்துறையில் இயங்கி வரும் திரிஷாவுக்கு ‘96’ படத்துக்கு பின்னர் ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
தற்போது திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் அவர் நடித்த ‘பரமபத விளையாட்டு’ எனும் படம் வெளியாக இருக்கிறது. அதேபோல், திரிஷா மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் சுமந்த் ராதாகிருஷ்ணனின் பட வேலைகளும் பரபரப்பான நிலையில் உள்ளது. தற்போது ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் அவர் கவனம் செலுத்திவருகிறார். ராங்கி என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ராங்கி படத்துக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், உஸ்பெகிஸ்தானில் ஸ்டிரிக்ட் ரூல்ஸ் என்பதால் அனுமதி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த மறுநொடியே திரிஷா உஸ்பெகிஸ்தான் பறக்க இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.