நடிகர் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் கடத்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இன்று நேற்று நாளை'. ஆர்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் டைம் ட்ராவல் வழியாக விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் கடந்த காலத்திற்கு செல்கின்றனர். அங்கு ஏற்பட்ட சில பிரச்னைகளை அவர்கள் எவ்வாறு சமாளித்து தங்களது பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள் என்பதே திரைக்கதை. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு ஜுலை மாதம், இயக்குநர் ஆர்.ரவிக்குமார் அறிவித்தார்.
இதில் விஷ்ணு விஷால், கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குநர் ரவிக்குமார் கதை எழுத, அவரின் அசோசியேட் கார்த்திக் இப்படத்தை இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார். இதில், ஹிப் ஹாப் தமிழாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
இருப்பினும் இப்படம் தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று ஏற்கனவே சி.வி.குமாரின் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தெரிவித்திருந்தது.
சில தினங்களுக்கு முன் தங்களுடைய தயாரிப்பில் வெளியான படங்களில் எந்த படத்தின் 2ஆம் பாகத்தை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் 'சூதுகவ்வும் 2' 'தெகிடி 2', 'மாயவன் 2' ஆகிய படங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த வாக்கெடுப்பின் கீழ் ரசிகர் ஒருவர் எங்களுக்கு இன்று நேற்று நாளை 2 வேண்டும் என்று தெரிவித்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், 'இன்று நேற்று நாளை 2' கதைப்பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஊரடங்கு முடிந்தவுடன் முதல்கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று பதிலளித்திருந்தது.
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'சூது கவ்வும் 2' படத்தின் கதை இறுதி செய்து திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சி.வி. குமாரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.