விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டுக்குச் சென்ற இவர், தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலிக்கத் தொடங்கினார். இந்நிலையில், டிசம்பர் 2018ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் வெளியிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். தற்போது திருமணம் முடிந்த நான்கு மாதத்துக்குள் நிக் - பிரியங்கா இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK ) என்ற அமெரிக்கா பத்திரிக்கை, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஓகே பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. வேலை, பார்ட்டி, பணம் என்று எதற்கு எடுத்தாலும் இருவருக்கும் இடையே சண்டை வருகிறதாம். அவசர அவசரமாக காதலித்து அதே அவசரத்தில் திருமணம் செய்தது தவறு என்பதை பிரியங்கா சோப்ரா, நிக் உணரத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்கியப் பிறகே பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்ததாம்.
பிரியங்கா குழந்தைகள் பெற்று சந்தோஷமாக வாழ விரும்பவில்லையாம். 21 வயது பெண் போன்று எப்பொழுதும் ஜாலியாக பார்ட்டி செய்ய விரும்புகிறாராம். இதுபோன்று, பல விஷயங்களில் அவர்களுக்குள் கருத்து மோதல்கள் இருப்பதால், விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவாகரத்து செய்தி உண்மையில்லை. அது வெறும் வதந்திதான் என பிரியங்கா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரும் தற்போது மியாமியில் குடும்பத்துடன் விடுமுறையை உற்சாகமாக கழித்து வருவது குறிப்பிடத்தக்கது.