இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் இதுவும் ஒன்று. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது.
'இந்தியன் 2' வில் கமல்ஹாசன் தாத்தா வேடத்தில் மட்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமலின் பேரனாக நடிகர் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே இப்படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் அண்மையில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், “நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன். உங்களது செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதெல்லாம் பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். ஆனால் கமல்ஹாசனுடன், எனக்கு பிடித்த நடிகரான சித்தார் உடனும், காஜல் அகர்வாலுடனும் நடிப்பேன் என்று நிச்சயம் நான் நினைக்கவில்லை. அதிலும் இயக்குநர் ஷங்கரின் இயக்கம் என்றால் மிகப்பெரிய ஆசிர்வாதம். ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைத்துவிட்டதைப் போல உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் தொடங்குகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.