திரைத்துறையில் 1980களில் நடித்து வெள்ளித்திரை கொண்டாடிவரும் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளின் ரீயூனியன் கடந்த ஞாயிறன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில், 1980 காலகட்டத்தில் திரையுலகம் கொண்டாடிய பிரபல நடிகர்கள், மோகன்லால், நாகார்ஜுனா, பாக்யராஜ், ஜெயராம், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், பிரபு, ரகுமான், வெங்கடேஷ் மற்றும் நடிகைகள் அமலா, ரேவதி, அம்பிகா, ராதா, சுஹாசினி, ஷோபனா, குஷ்பு, ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் 80'ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், '80'ஸ் நட்சத்திரங்களுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு இல்லை. சில வேளைகளில் அது நான் ஒரு மோசமான இயக்குநர், நடிகர் என்பதற்காக இருக்கலாம். அதனால்தான் அவர்கள் என்னை அழைக்கவில்லை. நான் மிகவும் வருந்துகிறேன்.
என் சினிமா வாழ்க்கை ஒன்றுமல்ல என்பதையே இது குறிக்கிறது. சிலர் நம்மை விரும்புவார்கள், சிலர் வெறுப்பார்கள். ஆனால் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டுதான் இருக்கும்' என பதிவிட்டிருக்கிறார்.