இந்தியா அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் 'கே.ஜி.எஃப்.'. அதுமட்டுமல்லாது இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளையும் வாங்கியது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இந்த பிரமாண்ட படத்தை ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
இந்த நிலையில், ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி கே.ஜி.எஃப். இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 'சலார்' என்னும் படம் உருவாகவுள்ளது. இதற்கான டைட்டில் போஸ்டரை தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் பிரபாஸ் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். இதைப் பார்க்கும்போது படம் நிச்சயம் ஆக்ஷன் படமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. படத்தில் நடிக்கவுள்ள நடிகைகள், மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அப்டேட்களை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
![Prabhas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/eooekx7vgaacqen_0212newsroom_1606903885_41.jpg)
இந்தப் படத்தையும் ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் இந்தியத் திரையுலகில், 'கே.ஜி.எஃப். சேப்டர் 1', 'கே.ஜி.எஃப். சேப்டர் 2', 'சலார்' ஆகிய மூன்று திரைப்படங்களையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட்ட நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.