சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகை சித்ரா, நள்ளிரவு 12 மணியளவில் தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது
80'களில் தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சித்ரா. அவருக்கு வயது 56. கேரளாவில் கொச்சியில் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். பத்தாம் வகுப்புக்கு படிப்புக்கு எண்ட் கார்ட் போட்ட அவர், படங்களில் பிஸியானார்.
சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சித்ரா நடித்துள்ளார்.

சேரன் பாண்டியனில் முக்கிய கதாபாத்திரம்
குறிப்பாக, சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. அந்த கேரக்டர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

திரைத்துறையில் பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருந்தாலும், சின்னதிரையில் தான் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பல விதமான காமெடி கேரக்டர்களில் நடித்திருந்தார்.
நல்லெண்ணெய் சித்ரா
தொடர்ந்து, நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திட, அன்று முதல் நல்லெண்ணெய் சித்ரா என கோலிவுட்டில் அழைக்கப்பட்டார். இவருக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவர் பிளஸ்-டூ முடித்துள்ளார். குழந்தையை வளர்ப்பதற்காகவே பல ஆண்டுகள் பட வாய்ப்புகளைத் தவிர்த்து வந்தவர் சித்ரா.

இவர் கடைசியாக நடித்த படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா" என்ற படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.அந்த படம் 2020 ஜனவரி 3ஆம்தேதி வெளியானது.
பறவைகளுக்காக வெளியூர் பயணம் ரத்து
நடிப்பால் பலரைக் கவர்ந்த சித்ரா, நிஜத்திலும் நல்லுள்ளம் கொண்டவராக திகழ்ந்தார். ஆம், தினந்தோறும் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர், உணவு அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
அவரது வீட்டிற்கு தினமும் நேரம் தவறாமல் பறவைகள் வருகின்றன. இதற்காக, அவர் வெளியூர் பயணம் செல்வதையும் தவிர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கணவரைப் பராமரித்து வந்த நிலையில், தற்போது அவர் காலமானது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சித்ராவை விடாமல் துரத்திய '21'
கடந்த மே 21ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் சித்ரா. அதுகுறித்து ‘’21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21-ன்னு சொல்லி சிலர் வாழ்த்தினப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது’’ என்று நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். தற்போது, அதே 21ஆம் தேதியே அவர் உயிர் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சித்ராவின் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: வெளியாகும் 'சிரஞ்சீவி 153' அப்டேட்