சென்னை: ஆணவக்கொலைக்கு எதிரான கதைக்களத்தைக் கொண்ட ’போலீஸ்காரன் மகள்’ என்ற திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
காவல் துறையில் சிறப்பு என்கவுண்டராக இருக்கும் ஒருவர், காதல் ஜோடிகளைக் கண்டால் விட மாட்டார். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து சித்ரவதை செய்வார். இந்தக் கொடூர காவலரின் மகள் தன்னைவிட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த ஒருவனை காதலிக்கவே அதனை அறிந்த அவர், தன் மகள் கண் முன்னே, காதலனை அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்துகிறார்.
”காதலனுக்கு உயிர் வேண்டுமென்றால் நம்ம சாதியைச் சேர்ந்த ஒருவனை மணம் முடித்துக்கொள்” என்று தன் மகளை மிரட்டவே தன் காதலனின் உயிருக்காக அவள் சம்மதிக்கிறாள். பின் காதலனோ பைத்தியமாகிவிடுகிறான்.
சில நாள்கள் கழித்து இவ்விருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். இவ்வாறு சாதி வெறியின் கொடூரத்தால் உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதையாக இந்த ’போலீஸ்காரன் மகள்’ உருவாக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் டிகிரி காலேஜ் எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இது. இதை தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். ஏற்கனவே தமிழில் ஸ்ரீதர் இயக்கி முத்துராமன் நடிப்பில் வெளிவந்த ’போலீஸ்காரன் மகள்’ எனும் தலைப்பையே இப்படத்துக்கு வைத்துள்ளனர்.
படத்தின் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் கதாநாயகனும் நாயகியும் மிகவும் நெருக்கமாக நடித்து உள்ளனர். தெலங்கானா, விஜயவாடா, பெங்களூரு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கொண்டையா மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் வருண், திவ்யா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயவாணி, ஸ்ரீனிவாஸ், நரசிம்மன், சி.ஏ.ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் தமிழ் வசனத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா எழுதியுள்ளார். முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன், ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம் பாடல்கள் எழுதியுள்ளனர்.
படத்துக்கு இசை - சுனில் காஷியப். ஒளிப்பதிவு - முரளி மோகன். கதை திரைக்கதை எழுதி படத்தை நந்தி இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க: அசுரன் படத்தில் நான் நிறைவாக பணியாற்றவில்லை - வெற்றிமாறன்