கானா பாடல்களால், ஆடாத கால்களையும் ஆட்டம் போட வைத்தவர் கானா பாலா என்ற பால முருகன். இவர் ஜூன் 20, 1970ஆம் வருடம் பிறந்தார். கானா பாலா தனது 51ஆவது பிறந்தநாளை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். கானா பாலா சட்ட வழக்கறிஞராக பணியாற்றியதோடு, இரண்டு முறை உள்ளாட்சி தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையில் தேனிசை தென்றல் தேவாவுக்கு பின்னர் கானா பாடல்களின் வெற்றிடத்தை நிரப்பி ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்தவர் கானா பாலா. இவர் பின்னணி பாடகராகவும், கானா பாடல்களை சொந்தமாக எழுதி பாடியும் வருகிறார். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான கானா பாடல்களை, தேனிசை தென்றல் தேவாவுக்குப் பின்னர் மிகச்சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் பாலா.

இவர் முதன்முதலாக "பிறகு" என்ற திரைப்படத்தின் மூலமாக கானா பாடகராக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். இந்நிலையில் 2012ஆம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் இடம்பெற்ற "ஆடி போனா ஆவணி", ”நடுக்கடலுல கப்பல” போன்ற பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் குமார், எஸ் தமன், சந்தோஷ் நாராயணன், யுவன்சங்கர்ராஜா என பல பிரபல இசையமைப்பாளர்களின் படங்களில் எண்ணற்ற பாடல்களை பாடி வருகிறார். மேலும் பல படங்களில் இவரே சொந்தமாக பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், கரோனா, சாலை விபத்து, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்தும் சமூக பொறுப்புடன் பாடல்களை பாடியுள்ளார்.

இன்று (ஜூன்.20) பிறந்தநாளைக் கொண்டாடும் கானா பாலாவுக்கு, #HAPPYBIRTHDAYGANABALA என்ற ஹேஷ்டேக் மூலம், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ’ஷெர்னி’ பட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வித்யா பாலன்