சமூகத்தில் சொல்லப்படாத விஷயத்தை அல்லது சொல்லத் தயங்கிய விஷயத்தை ஒரு கலைப்படைப்பு எடுத்துக் கூறுமானால், அதுவே அந்தப் படைப்பின் வெற்றி, அதைப் படைத்த கலைஞனின் வெற்றி. அப்படிப்பட்ட ஒரு படைப்பை நம் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த கலைஞன் இயக்குநர் ராம். அந்தயொரு படம் ‘பேரன்பு’. உலக சினிமா மேடையில் நாம் பெருமிதத்தோடு அரங்கேற்ற வேண்டிய பேரன்பு திரைப்படம் வெளியாகி இன்றோடு (பிப்ரவரி 1) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்றைய நாளில் பேரன்பு சமூகத்திற்கு உரக்கக் கூறியவை என்ன என்று நினைவு கூறுவோம்.
ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை
நீங்க எவ்வளவு நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு, புரிஞ்சிக்கிறதுக்காக இந்தக் கதையை எழுதுறேன் என்று படத்தின் தொடக்கத்தில் மம்மூட்டியின் குரலில் வார்த்தைகள் ஒலிக்கும். நிச்சயம் படத்தின் முடிவில் நம்முடைய வாழ்க்கை உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டது தான் என்கிற எண்ணம் நம் மனதுக்குள் உதித்து விடும்.
ஆம்! அப்படி ஒரு கதைக்களத்தைக் கொண்டதுதான் பேரன்பு. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பதின்பருவ பெண் பிள்ளையையும் அவளது தந்தையும் சுற்றி அமைந்தது இந்த கதைக்களம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை எடுத்துக்கூறிய திரைப்படங்கள் எத்தனையோ தமிழ் சினிமாவில் வந்துள்ளன.
ஆனால் அவை அனைத்தும் அவர்களை பற்றிய மற்றவர்களின் பார்வையை குறித்தே பேசப்பட்ட திரைப்படங்கள். பேரன்பு இதிலிருந்து தனித்து நிற்கிறது. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையின் உணர்ச்சிகளையும், தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் அப்பெண் பிள்ளையின் கோணத்திலிருந்தே நமக்கு புரிய வைக்கிறது. அந்தப் பெண் நம்முடனே பயணிப்பதை போன்ற உணர்வை பேரன்பு நமக்கு கொடுத்து விடுகிறது.
அனுதாபம் தேவையில்லை, புரிதல் போதும்
பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசும் திரைப்படங்கள் யாவும் அவர்கள் மீதான அனுதாபத்தை கட்டமைக்கும் விதத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் பேரன்பு மட்டும் விதிவிலக்காக அவர்கள் மீதான அனுதாபத்தை விட புரிதல் தான் மிக முக்கிய தேவை என்று அழுத்தமாக எடுத்துரைத்திருக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டிய விதமும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பதின்பருவ பெண்ணின் உணர்ச்சிகளை பார்வையாளனுக்கு கடத்திய விதமும் அவ்வளவு அற்புதமானது. இன்னும் நிறையப் படைப்புகள் இது போன்று வெளிவருவதற்கு தொடக்கப்புள்ளி இந்த பேரன்பு.
தந்தையின் பரிதவிப்பு
படம் நெடுகிலும் ஒரு இடத்தில் கூட மம்மூட்டி நடிகனாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குழந்தையை தாயின்றி வளர்க்க பல இன்னல்களை அனுபவிக்கும் ஒரு தந்தையாக தெரிகிறார். அதிலும், அஞ்சலி கதாபாத்திரம் தன்னை ஏமாற்றியது தெரிந்த பின்பும் கூட, ‘இப்படி ஒரு பெண் குழந்தையை வச்சிருக்கிற என்னையே நீங்க ஏமாத்துனா உங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் இருக்கும்’ என்று புன்னகையுடன் விலகி செல்வதாகட்டும், ஒரு அப்பா தன் மகளுக்கு எதற்காக திருமணம் செய்து வைக்க நினைப்பாங்க என்று ஒரு காட்சியில் கொடுக்கும் விளக்கமும் சரி, ஒரு தந்தையின் பரிதவிப்பு அப்படியே நம் முன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அப்படி ஒரு காட்சி தமிழ் சினிமாவில் சாத்தியமானதற்கு காரணம் இயக்குனர் ராமும், மம்மூட்டியும் தான். இடையே வலிந்து திணிக்கப்படாமல் கதையின் போக்கிலேயே திருநங்கைகள் சந்திக்கும் துயரங்களையும், அவலங்களையும் மிக நுட்பமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கும்.
இயற்கை பேரன்பானது
இயற்கை அழகானது, கொடூரமானது, இரக்கமற்றது, எனப் பல அத்தியாயங்களைக் கடந்து இயற்கை பேரன்பானது என்று திரைப்படம் முடிவுபெறும். இந்தத் திரைப்பட கதாப்பாத்திரங்களின் அடிப்படையில், இயற்கையானது பேரன்பாக முடிவுபெற வேண்டும் என்பதே பார்வையாளர் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது. அப்படி ஒரு தாக்கத்தை பேரன்பு நம்முள் கொடுத்திருந்தது. அதுவே ஒரு கலைப்படைபின் வெற்றியும்கூட. பேரன்பு போன்ற பல சினிமாக்கள் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.