நடிகர் நானி, நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளிவந்துள்ள 'ஜெர்சி' படத்தில், பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது வெளிவந்துள்ள இந்தப் படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
ஜெர்சி படத்தில் நடிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. இயக்குநர் என்னைத் தொடர்புகொண்டு கதை கூறும்போதே, அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் இந்தளவிற்கு மக்களிடம் எனது கதாபாத்திரம் போய்ச்சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
குறிப்பாக பிரபல இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் எனக்கு கைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க என்னைப் பரிந்துரை செய்த நண்பர் நானிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.