ஹாலிவுட்டில் தோன்றிய இணையத் தொடரான. ‘கலாசாரம்’ தற்போது அனைத்து மொழிகளிலும் களம் இறங்கியுள்ளது. இந்த இணைய தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதற்காகவே இதுபோன்ற தொடர்களில் திரைப் பிரபலங்கள் பலரும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், திரைப்படங்களைப் போன்று தணிக்கைக் குழு இதுபோன்ற இணைய தொடர்களுக்கு கிடையாது என்பதால், படைப்பாளர்கள் தங்களது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அமேசன் பிரைம் தளத்திற்காக இணைய தொடர் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்தத் தொடருக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இந்த அறிவிப்பை பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், "அமேசானுக்காக இயக்குநர் கௌதம் மேனன் இயக்கும் இணைய தொடரில் பணியாற்ற உள்ளேன். கரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலை செய்ய காத்திருக்கிறேன். இந்த இணைய உலகம் நம் அனைவருக்கும் சிறந்த இடமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.