இயக்குநர் மிஷ்கின் ’சைக்கோ’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஒரு அறிமுக நடிகர் நடிக்க வைக்கப் போவதாக மிஷ்கின் அறிவித்தார். ஆனால், அதன்பிறகு சாந்தனு வைத்து எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். இறுதியில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்தார். ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம், இசைஞானி இளையராஜா என பெரிய ஆட்களை கொண்டு சைக்கோ படத்தை மிஷ்கின் உருவாக்கி வருகிறார். இந்நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் திடீரென்று ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், தன்னுடைய துணை ஒளிப்பதிவாளரான காஷ்மீரைச் சேர்ந்த தன்வீர், சைக்கோ படத்தில் பணியாற்றியதற்காக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனவும், அதனால்தான் இந்த ட்வீட் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், காஷ்மீரில் நிகழும் இக்கட்டான நிலையிலும் சிறப்பாக பணியாற்றியதாக தன்வீரை அவர் பாராட்டியிருந்தார்.
இந்த ட்வீட் சினிமா ரசிகர்களை குழப்பமடையச் செய்தது. இதற்கு முன்னதாக இன்னொரு ட்விட்டையும் பி.சி ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார். படம் தொடங்கிய சில நாட்களில் அந்த ட்வீட்டை பி.சி ஸ்ரீராம் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ” வாழ்த்துகள் தன்வீர். மிஷ்கின் உன்னை வழிநடத்துவார். படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட அலர்ஜி காரணமாக படத்தில் பணியாற்ற முடியவில்லை.
மிஷ்கின் என்னுடைய இயலாமையைப் புரிந்து கொள்வார். சைக்கோ படத்தின் 99% வேலைகளை நீ(தன்வீர்) முடித்தால், படத்தின் டைட்டில் கார்டில் உன் பெயர் வருவதற்கு நான் பரிந்துரைப்பதை மிஷ்கினும் உதயநிதி ஸ்டாலினும் புரிந்து கொள்வார்கள். உண்மை மட்டுமே வெல்லும். காஷ்மீர் உன்னை நினைத்து பெருமை கொள்ளும்” எனக் கூறியுள்ளார்.
இந்த ட்வீட்டை பார்த்த பிறகே அனைவரது குழப்பமும் நீங்கியது. பி.சி ஸ்ரீராம் சொன்னது போலவே தன்வீர் சைக்கோ படத்தில் 99% வேலையை முடித்துள்ளார். அதனை நினைவுப்படுத்தும் விதமாகவே, பி.சி ஸ்ரீராம் தன்வீருக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறி அடுத்த ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர்களின் கதைகளைத் திருடி, வழக்கு நீதிமன்றத்தில் போன பின் இருமனதாக கிரேடிட் கொடுப்பவர்களுக்கு மத்தியில், பி.சி ஸ்ரீராமின் இந்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, 70% வேலையை ’ஐ’ படத்தில் செய்திருந்தாலும், 30% வேலைகளை செய்த தன்னுடைய உதவி ஒளிப்பதிவாளரான விவேகானந்தின் பெயரும் டைட்டில் கார்டில் பி.சி ஸ்ரீராம் வரவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.