இந்தியாவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில அரசுகளும் சுகாதாரத்துறையில் பிரதான கவனம் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், கரோனாவை எதிர்கொள்ள அவசர நிதியாக சுகாதாரத்துறைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழநாட்டில் இதுவரை 23 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தார். அப்போது வழக்கமாக சால்வை, பூங்கொத்து கொடுக்காமல் மக்களுக்கு உதவும் சானிடைசர் கேன் ஒன்றை வழங்கியுள்ளார்.
மேலும், அந்த சானிடைசர் கேனில் தன் கைப்பட வாழ்த்து மடல் ஒன்றையும் எழுதியிருந்தார். அதில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்று எழுதியிருந்தார்.
இது குறித்து பார்த்திபன் கூறுகையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் 5 லிட்டர் கேனில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழ்நாட்டின் மக்களின் சார்பில் வழங்கினேன்.
இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால், அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன். அந்த யோசனையை கருத்தில் கொண்டு செயல்பட உறுதியளித்ததாக கூறினார்.