சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் காம்போ எனக் கூறப்படும் நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி ஆகியோர் ஆறாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள 'அருவா' படத்தின் ஹீரோயின் தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சூர்யா நடிக்கும் 39வது படமாகவும், இயக்குநர் ஹரியின் 16வது படமாகவும் உருவாகிறது. இது சூர்யா - ஹரி ஹிட் கூட்டணியின் 6வது படமாகத் தயாராகிறது.
படத்தின் தலைப்பு 'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கிராமத்துப் பின்னணியில் காதல், குடும்ப சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையை நடிக்கவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். இதற்காக நடிகையின் தேர்வில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
பிரபல நடிகை ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் கதையை நன்கு ஃபைன் டியூன் செய்துள்ள இயக்குநர் ஹரி தனது முந்தையப் படங்களைவிட பக்கா மாஸ் என்டர்டெயினராக உருவாக்கவுள்ளாராம். அருவா படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்கவுள்ளனர். படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
ஏற்கனவே தீபாவளிக்கு தல அஜித்தின் வலிமை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூர்யாவின் அருவா படமும் ரேஸில் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தல அஜித், சூர்யா ரசிகர்கள் தற்போதே சமூக வலைதளங்களில் வலிமையா, அருவாவா என்ற வார்த்தைப் போரைத் தொடங்கியுள்ளனர்.