நாளை (ஜன.26) நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நிகழாண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடகி சித்ரா, கவிஞர் கைத்ராப்ரம் தாமோதரன் நம்பூதிரி, அஸ்ஸாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோய் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை உலகில் அவர் ஆற்றிய சாதனைக்காக அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஒடியா, துளு, உருது ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். முன்னதாக 2005 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. சின்னக்குயில் என்று அன்போடு அழைக்கப்படும் சித்ரா, இதுவரை சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் 'பூஜைக்கேத்த' எனத் தொடங்கும் பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார் சித்ரா. அன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகின் அரசியாக அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார் இந்த சின்னக்குயில்.
இதையும் படிங்க...எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு பத்மவிபூஷன் விருது