கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி., விருது வழங்கக் கூடாது எனப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, அதுகுறித்து, மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் 'மீ டூ' எனும் ஹேஷ்டேக்கை உருவாக்கி, சமூகவலைதளத்தில் பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்தனர்.
அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதை, முதன்முறையாக கேரளாவைச் சேராத தமிழ் கவிஞர் வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்குவதாக அறிவிப்பு வெளியானது
இந்த விருதினை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் விருது குறித்து தனது வாழ்த்துகளை வைரமுத்துவிற்குத் தெரிவித்தார்.
இச்சூழலில், கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவரும், தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையுமான பார்வதி, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கப்பட உள்ளதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வைரமுத்து மீது பாலியல் குற்றஞ்சாட்டிய பாடகி சின்மயி, உள்ளிட்ட பல பெண்களும் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்படுவதை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.
இச்சூழலில் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட இலக்கியத்திற்கான ஓ.என்.வி விருது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என ஓ.என்.வி பண்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.