பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கும் நடிகர் சிம்பு. அவரது திரைப்பயணத்தை ‘தொட்டி ஜெயா’ படத்துக்கு முன், அதற்கு பின் என பிரிக்கலாம். ‘மன்மதன்’ படத்தின் மூலம் பெரிய அங்கீகாரம் கிடைத்தாலும், ‘தொட்டி ஜெயா’ படத்தில் சிம்புவின் முதிர்ந்த நடிப்பை நீங்கள் காண முடியும். கிரைம் டிராமாவான ‘தொட்டி ஜெயா’ படத்தில் சிம்பு மிகக் குறைவாகதான் பேசியிருப்பார். முக பாவனைகளின் மூலம் ரசிகர்கள் அந்த காட்சிக்கான உணர்வை கடத்தியிருப்பார். V.Z. துரை இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இத்திரைப்படம் அப்போதைய சூழலில் சரியாக மக்களை சென்று சேராததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. இன்றளவும் சிம்பு ரசிகர்கள் மற்றுமின்றி பலராலும் ரசிக்கப்படும் திரைப்படம் ‘தொட்டி ஜெயா’.
ரஜினிக்கு மணிரத்னத்தின் ‘தளபதி’ அமைந்ததைப் போல் சிம்புவுக்கு V.Z. துரையின் ‘தொட்டி ஜெயா’...
‘தளபதி’ படத்தின் தாக்கம் இந்த படத்திலும் இருக்கும். அதில் ரஜினிக்கும் ஷோபனாவுக்கும் இடையேயான காதல் காட்சி போல இந்தப் படத்திலும் சிம்பு - கோபிகா இடையே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் காதல் காட்சி ஒன்று உண்டு. அதில் சிம்புவின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளை பெற்றது.
நாயகியின் காதலை மறுக்கும் சிம்புவுக்கு காதல் வந்த பின் நாயகியை சந்தித்து தன்னைப் பற்றி கூறும் காட்சி
சிம்பு: என் பேர் என்னனு தெரியுமா உனக்கு... தொட்டி ஜெயா... பேர் மாதிரியே இல்லைல... ஜெயச்சந்திரன்... இந்தப் பேர் எப்படி தொட்டி ஜெயாவா மாறுச்சுனே எனக்கு தெரியாது.. ஜெயச்சந்திரன்னு எனக்கு யார் பேர் வச்சானு கூட எனக்கு தெரியாது...
8 வயசுல கிழிஞ்ச டவுசர போட்டுகிட்டு 18 மணிநேரம் வேலை செஞ்சிருக்கேன்... 3 வேளை சோத்துக்காக... திடீர்னு ஒருத்தன அடிச்சனே... பணம் கொடுத்தானுங்க... இப்ப நம்ம தொழில் அடிக்கிறது... வெட்டு குத்து ரத்தம் இதான் என் வாழ்க்கை...
இப்ப என்ன பிடிக்கலைல என கதாநாயகியிடம் கேட்பார்... ஆனால் கதாநாயகிக்கு சிம்புவை பிடித்திருக்கும்... இதன் பிறகான காதல் காட்சிகளில் சிம்பு மிக அமைதியாக நடித்திருப்பார்... அதேசமயம் சிம்புவுக்கான மாஸ் காட்சிகளிலும் ‘தொட்டி ஜெயா’ படத்துக்கே முதலிடம் என்று கூறலாம்.
மிரட்டுறதுக்குதான் 10 பேர் வருவாங்கலாம்... அடிக்கிறதுக்கு ஒருத்தன்தானாம்... யாரோ தொட்டி ஜெயாவாம்... இதுதான் படத்தில் சிம்புவின் அறிமுக காட்சிக்கான வசனம்..
இந்தக் காட்சி முடிந்ததுமே... தனி ஆளா வந்து அடிச்சுருக்கான்... ப்ளாக் அண்ட் ப்ளாக் காஷ்ட்யூம்... கண்டிப்பா அக்யூஸ்ட் தொட்டி ஜெயாதான் சார் என ஒரு காவலர் பேசுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்....
அதேபோல் தொட்டி ஜெயா ஓடி ஒழியுற ஆள் கிடையாது... யாராவது அவன தேடுறாங்கனு தெரிஞ்சா... தேடுறவங்க முன்னாடி வந்து நிற்பான்... இப்படி சிம்புவுக்கான மாஸ் காட்சிகள் இப்படத்தில் ஏராளம்.
‘தொட்டி ஜெயா’ படத்துக்கு முன்பு அதிகமான பஞ்ச் டயலாக் பேசி நடித்த சிம்பு, தனது தோற்றத்திலும் மாற்றம் செய்துகொண்டு மிக அமைதியாய் நடித்திருந்த படம்தான் ‘தொட்டி ஜெயா’. சிம்பு என்ற நடிகனை பலரும் அடையாளம் காணத் தொடங்கியது இந்தப் படத்தில் இருந்துதான். இதன்பிறகு சிம்பு நடிப்பில் பல படங்கள் உருவாகியிருந்தாலும், ‘தொட்டி ஜெயா’ என்றுமே ஒரு கல்ட் கிளாசிக்தான். இந்தப் படத்தில் சிம்புவைப் பார்த்து ப்ளாக் அண்ட் ப்ளாக் காஷ்ட்யூம், கையில் வயர் என சுத்திய இளைஞர்கள் ஏராளம். இளைஞர்கள் நடை, உடை, பாவணைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் சிம்புவுக்கும் பெரிய பங்குண்டு. சூட்டிங்கை கட்டடிக்கிறார் சிம்பு என்ற பிரச்னைகள் எழுந்தபோதும், அவருக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது. இன்று சிம்புவின் 37ஆவது பிறந்தநாள். அவரது திரைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்...