சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு பலரிடையே தொற்றிக்கொண்டது. இதையடுத்து படத்தில் ரஜினிக்கு போலீஸ் கதாபாத்திரம், அவருக்கு ஜோடியாக நயன்தாரா என நாளொரு நாளாக சர்ப்ரைஸ் செய்தி வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. துப்பாக்கி, ஐபிஎஸ் அணியும் கால்சட்டை,பெல்ட் மற்றும் நாய் என முற்றிலும் காவல்துறைக்குரிய அடையாளங்களுக்கு நடுவே கூலிங் கிளாஸுடன் ரஜினி சிரிப்பது போன்ற அமைந்திருந்த அந்தப் புகைப்படம் அன்றைய நாளில் இணையத்தில் ஒரு ரவுண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்த சர்ப்ரைஸாக அடுத்த சில நாட்களில் ரஜினியின் போலீஸ் லுக் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கறுப்பு பனியன் அணிந்து தனக்கே உண்டான ஆக்ரோஷ பார்வையுடன், கைகள் முறுக்கேறியவாறு ரஜினிகாந்த் வெயிட் லிஃப்ட் எடுப்பது போல் இந்த லுக் அமைந்துள்ளது.
1999இல் வெளியான 'படையப்பா' படைத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் முறுக்கான உடல் தோற்றத்தைப் பார்த்து மிரட்சியாகும் அப்பாஸ்,'வாட் ஏ மேன், உங்களுக்கு வயாசகல' என்பார் ஆச்சரியம் தெளிக்கும் கண்களுடன். அந்த வகையில் ரஜினியின் 'தர்பார்' செகண்ட் லுக், 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தாலும் அந்த வின்டேஜ் நினைவுகளை ரசிகர்கள் மனதில் முன்வைப்பதாக இருக்கிறது.
'தர்பார்' படப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2020ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, இப்படம் திரைக்கு வரவுள்ளது.