தமிழில் 'துள்ளி ஓடும் புள்ளி மான்', 'கை நிறைய காசு' ஆகியப் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஏ.பி. ராஜ் (95). இவருக்கு நடிகை சரண்யா பொன்வண்ணன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழில் இயக்கிய படங்களைவிட மலையாளத்தில் அதிகப் படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி ஏ.பி. ராஜ் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
1925ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த ராஜ், 1940-களின் பிற்பகுதியில் டி.ஆர்.சுந்தரமின் வழிகாட்டுதலின் கீழ், தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன்பின் அவர் 1951இல் இலங்கைக்குச் சென்றார், அங்கு 10 ஆண்டுகள் தங்கியிருந்தபோது, 11 சிங்கள திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்று ஃபெப்கா (கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம்) இயக்குநர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவரது மறைவுக்கு ஃபெப்கா இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும் ஏ.பி. ராஜ் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்ததுடன், மலையாள திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளதாகக் கூறினார்.