ஒரே ஒரு கண்சிமிட்டல் காட்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன படம் 'ஒரு அடார் லவ்'. மலையாள புதுமுகங்கள் நடித்திருந்த இந்த படத்தில் 'மாணிக்க மலராய பூவி' என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் ட்ரெண்ட் ஆனது. இதில் இரண்டாவது நடிகையாக நடித்தவர் 'நூரின் ஷெரிஃப்'.
இவர் மலையாளத்தில் வளர்ந்துவரும் இளம் நடிகையாவார்.
இவர், நேற்று முன்தினம் கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த மஞ்சேரியில் புதியதாகக் கட்டப்பட்ட ஹைப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் மஞ்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே ஹைப்பர் மார்க்கெட்டுக்கு காரில் வந்து இறங்கிய நூரின் ஷெரிஃப்பை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது.
ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய நூரின் மீது சிலரின் கை பட்டதால், அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மூக்கை பிடித்தவாறு கூட்டத்தில் இருந்து விலக நூரின் முயன்றபோது பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி மூக்கில் அடிபடும் இந்த காணொலியை அங்கிருந்த ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனிடையே ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், நூரின் மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார். 'நான் சொல்வதைக் கேளுங்கள். சிறிது நேரம் அமைதியாக இருங்கள். என்மீது அன்பு இருந்தால் நான் சொல்வதைக் கேளுங்களேன்' என அவர் பேசும் காணொலியும், தற்போது வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.