'ஒரு நாள் கூத்து' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பதிவேற்றுவது, ரசிகர்களிடம் உரையாடுவது உள்ளிட்டவற்றை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று (ஜூன் 23) ஸ்விக்கி செயலியில் உணவு ஒன்றை ஆர்டர்செய்துள்ளார். உணவை சாப்பிடத் தொடங்கியபோது, அதில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அதனைப் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.
அதில், "உணவகங்கள், ஸ்விக்கி நிறுவனம் என்ன தரத்தைப் பின்பற்றுகின்றன எனத் தெரியவில்லை. இது முதல்முறை அல்ல; இரண்டாவது முறை. இதுபோன்ற உணவகங்களில் உள்ள உணவு தரம் சரியாக இல்லை என்றால், அதனை ஆய்வுசெய்து அபராதம் விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஸ்விக்கி நிறுவனம் பதிலளித்த பதிவை வெளியிட்ட நிவேதா, "ஸ்விக்கி நிறுவனத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எனக்கு உறுதியளித்துள்ளனர். 24 மணி நேரத்தில் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ - ஜூன் 25 டீசர்!