வாழ்க்கையில் பலருக்கும் பல கனவுகள், லட்சியங்கள் இருக்கும். அதை நோக்கிச் செல்லும்போது ஏராளமான தடைகள் வரும். மனம் நொறுங்கி கனவுகள் மங்கி, மயங்கும் நிலையில் நாம் கிடக்கும்போது யாரேனும் வந்து, மயக்கம் என்ன, எழுந்து ஓடு என்று கூறுவார்களா என்று அனைத்து மனிதர்களும் எதிர்பார்த்து கிடப்பார்கள். அப்படி இங்கு கூறுவதற்குப் பலர் தயாராக இல்லை. ஆனால் 2011ஆம் ஆண்டு செல்வராகவன் 'மயக்கம் என்ன' எழுந்து ஓடு என்று தனது படைப்பு மூலம் அனைவரிடமும் கேட்டுவிட்டு எந்தச் சலனமுமின்றி இருந்துகொண்டிருக்கிறார்.
கோலிவுட்டில் முக்கியமான சினிமாக்கள் பல உண்டு. ஆனால் மயக்கம் என்ன சினிமா இளைஞர்களுக்கு மிக ஸ்பெஷலானது. ஏனெனில், இந்தத் திரைப்படம் 'முக்கியமான' என்ற வார்த்தையைத் தாண்டி 'உணர்வுப்பூர்வமான', 'மனதுக்கு நெருக்கமான' என்ற வார்த்தைகளுக்குள் அடங்கக்கூடியது.
"என் பேரு கார்த்திக் சுவாமிநாதன். வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆகணும்ங்கிறது என் லட்சியம்'' எனப் பேசிவிட்டு தனது நண்பர்களை, தங்கையை, நண்பனின் தந்தையை அறிமுகப்படுத்திவிட்டு, ''இது என் கதை, எங்க கதை'' என தனுஷ் கூறுவார். அந்த நொடியிலிருந்து திரைப்படம் முடியும் வரை ரசிகர்களுக்கு, ''இது நம்ம கதை'' என்ற மனப்பான்மை ஓடிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், காட்சியையும் செல்வராகவன் அவ்வளவு உணர்வுப்பூர்வமாக அமைத்திருப்பார்.
தந்தை, தாயை இழந்து தங்கையை வைத்துக்கொண்டு இருக்கும் அண்ணன்களை உறவுக்காரர்கள் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். இதுவரை நடந்துகொண்டிருப்பது அதுதான். ஆனால், அவனுக்கு நண்பர்கள் இருந்தால்? அந்த நண்பர்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால்? அவனது வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள்தான் கார்த்திக்கின் நண்பர்கள். ' காட்டுல தங்காத ரிஸ்க், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா இருந்தா என்ன... காசு நான் தரேன் ' என கார்த்திக்கின் நண்பர் சுந்தர் கூறுவார். "காசு தரேன்'' என்று அன்பில் சுந்தர் கூறியது ஒருபுறம் இருந்தாலும், 'காட்டுல தங்காத ரிஸ்க்' என்ற அந்த அக்கறை தான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
அதேபோல், தாய் தந்தையை இழந்த கார்த்திக்கிற்கு மட்டுமின்றி சுந்தரின் நண்பர்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பார் சுந்தரின் தகப்பன். குறிப்பாக, அனைவரையும் படுக்க வைத்து விட்டு எல்லோரும் இருக்கிறார்களா என்று எண்ணிப்பார்த்துவிட்டு செல்வது, எல்லாம் தாயாக தந்தை மாறிய மஹோன்னத தருணம். அந்த மஹோன்னத தருணத்தை மயக்கம் என்ன திரைப்படத்தில் உணரலாம். அதேபோல் சுந்தர் காதலித்துக் கொண்டிருந்த பெண் கார்த்திக்கை காதலிப்பதாகட்டும், அதனால் சுந்தர் கார்த்திக்கிற்கும் மோதல் வர.. அதை மதுவை வைத்து தீர்த்து வைப்பதாகட்டும்... அந்த ரமேஷ் அங்கிள்தான் (சுந்தரின் அப்பா) பலரின் ட்ரீம் தகப்பன்.
இந்தத் திரைப்படத்தில் தனுஷ், ரிச்சாவின் நடிப்பைத் தாண்டி இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவை. அது ராம்ஜியின் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷின் இசை. ஒவ்வொரு ஃப்ரேமிலும் ராம்ஜியின் உழைப்பு அப்படி இருக்கும். அதேபோல், ஜி.வி. பிரகாஷின் மிகச்சிறந்த இசையில் மயக்கம் என்ன பின்னணி இசைக்கு முக்கிய இடம் உண்டு.
வைல்டு லைஃப் ஃபோட்டோகிராபியில் தனது இன்ஸ்பிரேஷனான மாதேஷ் கிருஷ்ணசுவாமியிடம் உதவியாளராக சேர, அவரது அலுவலகத்திற்குச் செல்லும் தனுஷ் தான் எடுத்த புகைப்பட ஆல்பத்தை அவரிடம் காட்டிவிட்டு அட்லீஸ்ட் உங்க அசிஸ்டென்ட்டாவாவது சேர்த்துக்கங்க சார் என்று சொல்ல, அதற்கு மாதேஷ் கிருஷ்ணசுவாமி '' அட்லீஸ்ட் '' என்ற ஒரு வார்த்தையை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவார். இந்த ஒரு காட்சியில், ஒரு வசனத்தில் அவருக்குள் இருக்கும் ஈகோ வெளிப்படும்.
பொதுவாக தான் தூரத்தில் ரசித்தவரின் அருகில் சென்றால் பதற்றத்தில் வார்த்தைகள் வராது. அப்படியே மீறி வந்தாலும் ஏதேனும் ஒரு வார்த்தை தவறுதலாக வெளியாகிவிடும். இது மனித உளவியல். அந்த உளவியல் பார்வையில் பார்த்தால், மாதேஷ் கிருஷ்ணசுவாமியிடம் கார்த்திக் எந்த நிலையில் நின்றிருப்பான் என்பது புரியும்.
இந்த உலகத்தில் பிடித்த வேலையை செய்வது ஒரு ரகம் என்றால், பிடித்த வேலையை ரசித்து செய்வது இரண்டாம் ரகம். கார்த்திக் இரண்டாம் ரகம். யாமினி (ரிச்சா கங்கோபாத்யா) கார்த்திக்கிடம் 'உனக்கு ஃபோட்டோ கிராபி வரல' என சொன்னதும் அவர் ஒரு பாட்டியை ஃபோட்டோ எடுத்துவிட்டு யாமினியிடம் தொலைபேசியில் பேசும்போது, 'நான் பிச்சைக்காரனாவே இருக்கேன். ஆனா, பிச்சைக்கார ஃபோட்டோகிராபரா இருக்கேன்' என சொல்வதில் தெரியும் கார்த்திக் அந்த வேலையை எவ்வளவு ரசித்து செய்கிறார் என்று.
ஒரு கலைஞன் முதலில் ஆழமான ரசிகனாக இருக்க வேண்டும். அந்த ஆழமான ரசித்தல் என்பது தன்னிலை மறத்தல். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாதேஷ், கார்த்திக்கிடம் ஒரு அசைன்மென்ட் கொடுக்க பறவையை புகைப்படம் எடுப்பதற்காக காட்டுக்குள் செல்வார். அந்த புகைப்படத்தை ஒழுங்காக எடுத்துவிட்டால் தன்னுடைய குருநாதரிடம் உதவியாளராக இணைந்துவிடலாம் என்ற நிலையில், அந்தப் பறவை தனது சிறகை விரித்து நிற்பதைக் கண்டு புகைப்படம், எடுப்பதை மறந்துவிட்டு அந்த பறவையை தன்னிலை மறந்து ரசித்த ரசனைக் கலைஞன் கார்த்திக்.
எந்த ஒரு விஷயத்துக்காக நாம் ஆழ்மனதில் இருந்து உண்மையாக உழைக்கிறோமோ...அதற்கு இயற்கை கூட பாதை ஏற்படுத்தி கொடுக்கும், அப்படி தான் கார்த்திக்கின் தேடலுக்கு, காத்திருப்புக்கு இசைந்து அழகாக போஸ் கொடுத்திருக்கும் அந்த பட்சி. அந்தக் காட்சி உண்மைக்கு இயற்கை தந்த பரிசு.
இன்ஸ்பிரேஷனாக நினைத்தவரிடம் நாய் போல் வேலை செய்வது, தன்னுடைய ஃபோட்டோவை ஆய் ஃபோட்டோ என சொல்லிவிட்டதால் யாமினியிடம் உடைந்து அழுவது என மயக்கம் என்ன திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு அசுரப் பாய்ச்சல். குறிப்பாக, அந்த பேருந்து நிலைய காட்சியில் தனுஷை அணைத்து தேற்றிய பிறகு, இரண்டு பேரும் முத்தமிட்டு கொண்டிருக்கும்போது ''சுந்தர் காலிங்' 'என்று தனுஷின் ஃபோன் அலற பின்னணியில் ஜி.வி. பிரகாஷின் இசை ஏதோ செய்யும்.
செல்வராகவன் மனித உளவியலை ஆழமாக பதிவு செய்யக்கூடியவர். அவர் ஒரு மாதிரியானவர் என்று பலர் கூறுவார்கள். ஆனால், செல்வாவைப் பொறுத்தவரை மனித மனங்களுக்குள் இருக்கும் அழகை, அழுக்கை எந்தவித சமரசமுமின்றி பரிமாறக்கூடியவர். அவரது திரைப்படங்களில் மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பெரும் இடம் இருக்கிறது. அவரது திரைப்படங்களில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவரது நாயகிகளின் குரலிலும், பாவனைகளிலும் தைரியம் மிளிரும். அப்படிப்பட்டவர்களில் யாமினிக்கு எப்போதும் முதலிடம் உண்டு.
உலகின் சிறந்த பழி தீர்த்தல் வாழ்ந்து காட்டுதல். துரோகம் செய்த மாதேஷ் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டிய கார்த்திக் வேறு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார். அப்படி வாழும் கார்த்திக்கை அவனுடைய பழைய வாழ்க்கைக்கு அழைத்து வர தனி மனுஷியாக யாமினி நடத்திய போராட்டம் காலத்தால் அழியாதது.
குறிப்பாக, கார்த்திக் மனப்பிறழ்வுக்கு உட்பட்டிருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, கார்த்திக்கின் நண்பர் யாமினியை தன் வசப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும்போது, கறாராக பார்வையாலும், விரலாலும் மிரட்டிவிட்டு, தான் கார்த்திக்கிற்கானவள் என உறுதிபட சொல்லும் யாமினி, சபலத்துக்குட்பட்ட கணவரின் நண்பருக்குத் திருந்த வாய்ப்பு தருவதெல்லாம் மாடர்ன் பெண்களை விளாசும் நபர்களுக்கு யாமினியின் சரியான சவுக்கடி.
தன்னுடைய கரு கலைந்த ரத்தக்கறையைத் துடைக்கும்போது, கார்த்திக்கிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வெறிகொண்டு அழுவது, சைகைகளால் கோபப்படுவது என யாமினியாக வாழ்ந்திருப்பார் ரிச்சா. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்கள். ஆனால், அந்த ஆணின் பின்னால், அவள் என்னென்ன வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை யாரும் இங்கு பேசுவதில்லை. அதை மயக்கம் என்ன திரைப்படம்தான் அப்பட்டமாக பேசியது.
கரு கலைந்ததிலிருந்து ஒரு வார்த்தைக்கூட பேசாத யாமினி குறித்து கார்த்திக், சர்வதேச விருது மேடையில், "இந்த விருது கைத்தட்டல் எல்லாம் என் வைஃப்க்கு தான் போய் சேரனும், அவ இரும்பு மனுஷி! தன்னந்தனியா போராடி என்ன இங்க நிக்க வெச்சிருக்கா" என பேசுவது அழகியலின் உச்சம். குறிப்பாக, 'உங்களோடு சேர்ந்து நானும் அவளுக்கு கை தட்டுறேன்' என கை தட்ட அனைவரும் கை தட்டுவார்கள். இப்போது அந்தக் காட்சியைப் பார்த்தாலும் இதுபோல் இருக்கும் பல யாமினிகளின் வலியை உணர முடியும். முக்கியமாக அவர்களை மதிக்கவும், அவர்களுக்கு கை தட்டவும் தோன்றும்.
ஒருவரின் புறக்கணிப்பும், மௌனமும் நம்மை ஏதோ செய்யும். எதையாவது செய்யத் தூண்டும். யாமினியின் மௌனமும், புறக்கணிப்பும் அந்த வகையைச் சேர்ந்தது. அதுதான் கார்த்திக்கை கொண்டுபோய் சர்வதேச மேடையில் நிறுத்தியது. இதுபோன்ற யாமினிகளை யாரும் கவனிக்காதபோது, அவர்களை அடையாளப்படுத்தியதற்காகவே மயக்கம் என்ன திரைப்படத்திற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். முக்கியமாக, கரு கலைந்ததிலிருந்து பேசாத யாமினி, சர்வதேச விருதை வாங்கிவிட்டு கார்த்திக்கிடமிருந்து வரும் அழைப்பை எடுத்து ஹலோ என்று சொல்வதற்கு முன் சில நொடிகள் மௌனம் நிகழும். அந்த நொடிகளில் வரும் படபடப்பையும், பதற்றத்தையும், ஏக்கத்தையும், என்ன பேச போகிறார் என்று எழுந்த எதிர்பார்ப்பையும் எழுத்துக்குள் அடக்க முடியாது.
'ஹலோ'என்று கார்த்திக்கிடம் யாமினி சொன்ன பிறகு 'A film By Selvaragavan' என்று திரையில் வரும். அப்போது, லட்சியம் நோக்கிய பயணத்தில் புறக்கணிப்புகள் ஏற்பட்டால், கனவு கலைந்துவிடுமோ என்ற பயம் தோன்றினால், துரோகம் நடந்தால்.... மயக்கம் என்ன? தேற்றுவதற்கு யாமினிகள் இருக்கிறார்கள் என்ற தைரியமும், யாமினிகளைப் போற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வும் எழும்.... வாழ்த்துகளும், நன்றிகளும் செல்வ ராகவன்.