வாஷிங்டன்: பில்லியன் டாலர் வசூலை குவித்த 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தை புதுமையான கதையம்சத்துடன் புதுப்பித்து வெளியிட பாராமவுண்ட் மற்றும் ஹாஷ்ப்ரோ தயாரிப்பு நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.
'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தின் புதிய கதையை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள இந்த நிறுவனங்கள் ஜாபி ஹரால்டு, ஜேம்ஸ் வான்டர்பில்ட் என் இரு கதாசிரியர்களை நியமித்துள்ளனர்.
ஸாக் ஸ்நைடர் இயக்கிவரும் ஸோம்பி திரைப்படமான 'ஆர்மி ஆஃப் தி டேட்' என்ற படத்துக்கு இணை கதாசிரியராகத் திகழ்பவர் ஜாமி ஹரால்டு. இதேபோல் இயக்குநர் ஃபின்சரின் சூப்பர் ஹிட் படமான 'ஸோடியாக்' படத்துக்கு கதை எழுதியவர் வான்டர்பில்ட்.
'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தின் இடம்பெறும் கதாபாத்திரத்தை மையப்படுத்தி கிளைக் கதையாக 2018ஆம் ஆண்டு இறுதியில் 'பம்பில்பீ' என்ற பெயரில் ஆக்ஷன் திரில்லர் படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாக 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தை புதுப்பிப்பது குறித்து படத்தயாரிப்பாளர்களுக்கு யோசனைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
2007ஆம் ஆண்டு வெளியான 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' திரைப்படத்தில் ஜான் ரோஜர்ஸ் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார். மைக்கேல் பே படத்தை இயக்கியிருந்தார். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கைப்போடு போட்ட நிலையில், இதன் அடுத்தடுத்த பாகங்களான ரிவெஞ் ஆஃப் தி ஃபாலன், டார்க் ஆஃப் தி மூன், ஏஞ் ஆஃப் எக்ஸ்டிங்ஷன், தி லாஸ் நைட் ஆகியவையும் சூப்பர் ஹிட்டாகின.
இதில் டார்க் ஆஃப் தி மூன், ஏஞ் ஆஃப் எக்ஸ்டிங்ஷன் படங்கள் ஒரு பில்லியன் யுஎஸ் டாலருக்கு மேல் வசூலித்தன.
இதையடுத்து தற்போது படத்தின் கதையில் சிறு புதுமைகளைப் புகுத்தி 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' பிரபஞ்சத்தை பெரிதாக்க தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.