சென்னை: பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவது குறித்த தகவலை தெரிவித்துள்ளார் ஃபெப்சி தலைவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி.
வடபழனி கமலா திரையரங்கில் தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், திரைப்பட தொழிலாளர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களுடைய 25 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக சங்க நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி
சென்னை அருகே பையனூரில் வழங்கப்பட்டுள்ள 50 ஏக்கர் நிலத்தில், 6 ஆயிரம் வீடுகள் கட்டலாம். அதில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளோம்.தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம். அவர்களிடம் தேதி கேட்ட பின்னர் அடிக்கல் நாட்டும் விழா நடைபெறும்.
ஸ்டுடியோவுக்காக வழங்கியுள்ள 15 ஏக்கரில் தற்போது இரண்டு ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சில ஸ்டுடியோக்கள் கட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் எப்படி உருவானதோ, அதேபோல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பையனூர் திரைப்பட நகரமாக மாறும் எனத் தெரிவித்தார்.