'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஹெ. வினோத். இவர் தற்போது நடிகர் அஜித்தை வைத்து, இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தை ரீமேக் செய்து 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பில் இயக்கி உள்ளார். ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை பற்றிய கருத்து ஒன்றை காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் அவர்களின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியும் பாராட்டத்தக்கது.
சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார் !
பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்...
பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவிக் கோரி குறுந்தகவல் செல்லும் .
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ புகைப்படத்தையோ காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட தடை உள்ளது. பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகும் என்று எண்ணியே பலர் புகார் அளிப்பதில்லை.
குழந்தைகளுக்கெதிரான வழக்குகளில் மரணதண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் ( Protection of Children from Sexual Offences Act) நிறைவேற்றியுள்ளது . இவ்வழக்குகளில் ஜாமீன் கிடைப்பதும் கடினம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ( Crime against women) விசாரிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது.
அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் ( Child friendly Police officers) பணியில் உள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை சென்றடையும்.
பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை. நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை !” என்று கூறியுள்ளார்.
அர்ஜூன் சரவணன், அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் அஜித் இருசக்கர வாகனம் ஒட்டும் போது தலைக்கவசமும் கார் ஒட்டும் போது சீட் பெல்ட் அணிந்து நடித்ததற்கு பாராட்டி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.