சென்னை: இயக்குநர் மிஷ்கின் - உதயநிதி கூட்டணியில் உருவாகியிருக்கும் சைக்கோ படத்துக்கு எழுந்த தலைப்பு பிரச்னை சரியான நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நித்யா மேனன், அதீதி ராவ் ஹெய்தரி, இயக்குநர் ராம், 'ஆடுகளம்' நரேன், சாஜி சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - தன்வீர் மிர். தயாரிப்பு - டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம்.
இதையும் படிங்க: ’சைக்கோ’ படத்தில் என் சிஷ்யன்தான் ஒளிப்பதிவு- இது பி.சி ஸ்ரீராமின் பெருந்தன்மை!
இதையடுத்து படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது:
'சைக்கோ' படம் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை ஒரு அற்புதமான அனுபவமாக உள்ளது. இயக்குநர் மிஷ்கினின் எழுத்து, இயக்கம் - உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதீதி ராவ் ஆகியோரின் வித்தியாசமான அவதாரம் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் பெரும் எதிர்ப்பார்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது.
இந்த நேரத்தில் எங்களது கடின உழைப்பு, படத்தின் உண்மையான கருத்தாக்கத்தைப் புரிந்துகொண்டு எங்களது படத்துக்கு சைக்கோ டைட்டிலை அனுமதித்ததற்கு தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது படத்தை இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் நேர்த்தியும் மொழிகடந்து பேசப்படும். வரும் 2020 ஜனவரி 24ஆம் தேதி உலகமெங்கும் மிகப்பிரமாண்டமாக படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தப் படத்தின் தணிக்கையின்போது டைட்டிலை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. மனநோய் பற்றிய பெயர்களை படத்தின் தலைப்பாக வைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
ஆனால் படத்தின் டைட்டிலை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் மிஷ்கின், ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பினார். இதைத்தொடர்ந்து படத்தின் தலைப்பு ரிவைசிங் கமிட்டியில் அனுமதி அளித்ததுடன், தணிக்கை சான்றிதழும் வழங்கியுள்ளனர்.
இதனால் டிசம்பர் 27ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஒரு மாதம் வரை தள்ளிப்போயுள்ளது.
இதையும் படிங்க: சிக்கலில் சிக்கித்தவிக்கும் மிஷ்கினின் 'சைக்கோ'