ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடிகர் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகாமுனி’. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாந்த குமார். இவரின் முந்தைய படமான ‘மௌனகுரு’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் ‘மகாமுனி’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமன் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
'மகாமுனி' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ?
மகாமுனி படத்தின் வேலைகள் ஜனவரி மாதம்தான் ஆரம்பமானது. விரைவில் ரிலீசாக உள்ளது. என்னை பொருத்தவரை இந்த படம் ஒரு 8 மாத ப்ராஜெக்ட் தான். கதை நவம்பர் மாதம் கேட்டோம். ஜனவரியில் வேலைகளை தொடங்கிவிட்டோம். இயக்குநர் சாந்தகுமார் மட்டுமே 8 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டார். அவரை நாங்கள் ஃபாலோ பண்ணிட்டுதான் இருந்தோம்.
'மகாமுனி' படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
மூன்று பாடல்கள் உள்ளது, படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால், மூன்று பாடல்களுமே கதையோடு இணைந்திருக்கும், கமர்ஷியலாக இருக்காது.
தமிழ் படத்திற்கும் தெலுங்கு படத்திற்கும் இசையமைப்பதில் உள்ள வித்தியாசங்களை எப்படி கையாளுகிறீர்கள் ?
தெலுங்கில் ஹீரோ ஓரியண்டட் படமாக இருக்கும். தமிழில் ஸ்கிரிப்ட் மற்றும் கமர்ஷியலாக ஓரியண்டடாக இருக்கும். அதனால்தான் நான் தமிழில் கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து இசை அமைக்கிறேன். தெலுங்கில் கமர்சியல் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். இப்படித்தான் இரண்டு மொழிகளிலும் இசை அமைக்கிறேன். இரண்டு மொழி படங்களிலும் நான் நன்றாகவே பணியாற்றி வருகிறேன்.
தெலுங்கில் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள நீங்கள் தமிழில் குறைந்த அளவில் இசையமைக்க காரணம் என்ன?
சரியான வாய்ப்புகள் எனக்கு அமையவில்லை. நான் மிகச் சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய தாயார் சிறந்த பின்னணிப் பாடகி, அவரை உங்கள் இசையில் பாட வைக்கும் எண்ணம் உள்ளதா?
நிச்சயமாக எனக்கும் அந்த ஆசை உள்ளது. அதற்கான நேரம் காலம் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக எனது தாயார் எனது இசையில் பாடுவார், பாட வைப்பேன்.
'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமான நீங்கள் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை?
என்னுடைய துறை நடிப்பு இல்லை. நான் கற்றுக் கொண்டதெல்லாம் இசைதான். அதுமட்டுமல்லாமல் எங்கள் குடும்பமும் இசை சார்ந்த குடும்பம். எனக்கு இசை உதவிகரமாக இருந்ததால் இசைத் துறையை தேர்ந்தெடுத்தேன். தற்போது வாய்ப்புக் கிடைத்தாலும் நான் நடிக்க மாட்டேன்.
நடிகர் ஆர்யாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து?
நடிகர் ஆர்யா எனது நண்பன். எப்பொழுதும் என் இதயத்தில் இருப்பவர். தமிழ் திரைப்படங்களில் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பவர். அவரை எப்பொழுதும் நான் பெஸ்ட் ஆக தான் பார்ப்பேன். ஆர்யா என்னுடைய டார்லிங்.
இசை பள்ளி துவங்க எண்ணம் உள்ளதா?
எதிர்காலத்தில் இசைக்கு என்று ஒரு பள்ளி துவங்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக உள்ளது. இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இசைப் பள்ளியை துவங்கலாம் என்று எண்ணி உள்ளேன். நான் இசையில் என்னவெல்லாம் கற்றுக் கொண்டுள்ளேனோ அந்த அனுபவங்களை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள உள்ளேன்.
இசையைத் தவிர உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றால் என்ன?
கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும், வாரம்தோறும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் கிரிக்கெட் விளையாடுவேன். ப்ரொபஷனலா பயிற்சி எடுத்துக்கொண்டு செலிபிரிட்டி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன்.