கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு மார்ச் இறுதி வாரம் முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. இதன் காரணமாக தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய பழைய திரைப்படங்களை ஒளிப்பரப்பு செய்ய தொடங்கின.
படப்பிடிப்பு நிறைவு செய்து இறுதி கட்ட பணிகள் முடிந்து திரைவெளியிட்டுக்கு தயாரான படங்கள் டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியாக தொடங்கின. இதனால் மக்களிடையே அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் பிரபலமாயின. இதற்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படங்களே பின்னாளில் ஓடிடி தளத்தில் வெளியாகும். ஆனால் இந்தாண்டு பல முன்னணி பிரபலங்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாயின. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
ஓடிடி தளத்தில் தமிழில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் முதன்முதலாக வெளியானது. இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் 'பெண் குயின்', அனுஷ்காவின் 'நிசப்தம்', சூர்யாவின் 'சூரரைப் போற்று', நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளி வந்தன. இதே போல் மற்ற மொழிகளிலும் திரைப்படங்கள் வெளி வந்தன.
தற்போது ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பத்து திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் முதல் இடத்தில் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான 'தில் பேச்சரா' உள்ளது. இரண்டாவது இடத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படமும் எட்டாவது இடத்தில் நயன்தாராவின்' மூக்குத்தி அம்மன்' திரைப்படமும், பத்தாவது இடத்தில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் மூன்று இடங்களை தமிழ் படங்கள் பெற்றிருப்பதை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.