சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து சரியான வழிகாட்டுதல்கள் வந்தபின்னர் தான் திரையரங்குகள் திறப்பு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, பல கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய 8-ம் கட்ட ஊரடங்கு நாளை (செப். 30) முடிவடைய உள்ளது. பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டபோதும், திரையரங்குகள் திறப்பு தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவதற்கும், சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் திறப்பது குறித்து தற்போது வரை மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து சரியான வழிகாட்டுதல் எதுவும் வரவில்லை. சரியான வழிகாட்டுதல் வந்த பின்பு, தமிழ்நாட்டில் மருத்துவக் குழுவினர் வழங்கக்கூடிய அறிவுரைகளுக்கு ஏற்ப, திரையரங்குகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” என்று கூறினார்.
தொடர்ந்து ஓடிடி வாயிலாக திரைப்படங்கள் வெளியிடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. ஓடிடி பிரச்னை உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்னையாகும். இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
பேச்சு வார்த்தைக்கு அவர்கள் தயார் என்றால், பேச்சு வார்த்தை நடத்த அரசும் தயாராக உள்ளது. பாடகர் எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்குப் பரிந்துரை செய்துள்ளோம். இதுகுறித்து அவர் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'எஸ்.பி.பி. பெயரில் இசைப் பல்கலைக்கழகம் கட்ட வேண்டும்'