கரோனா தொற்று போன்று கிருமியின் தாக்குதலால் ஆபத்து நிகழலாம் என்பதை கணித்திருந்த மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், ரசிகர்களின் கிண்டல்களையும் மீறி முகமூடி அணிந்துகொண்டு வலம் வந்ததாக அவரது முன்னாள் மெயக்காப்பாளர் கூறியுள்ளார்.
பாப் உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்பட்ட மறைந்த மைக்கேல் ஜாக்சனிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் மேட் ஃபிட்டெஸ். இவர், கரோனா தொற்று போன்று கிருமி தொற்று பரவலாம் என்பதை மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தபோது கணித்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
இயற்கை பேரழிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று அடிக்கடி மைக்கேல் ஜாக்சன் கூறுவார். எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்த அவர், கிருமி தொற்றுகளால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான சூழல் எந்நேரமும் ஏற்படலாம் என உயிருடன் இருந்தபோதே கணித்திருந்தார்.
ஒரே நாளில் நான்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை அவருக்கு ஏற்பட்ட நேரத்தில், கிட்டத்தட்ட விமானத்திலேயே அவர் இருந்தார். இதனால் எங்கு சென்றாலும் கேலி, கிண்டல்களை மீறி முகமூடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு முறை நான் அவரிடம், "நீங்கள் முகமூடி அணிய வேண்டாம். உங்களை அந்த தோற்றத்தில் புகைப்படம் எடுக்கும்போது அருகே நிற்பதற்கு அசெளகரியமாக உள்ளது" என்றேன். அதற்கு அவர், "எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போகாது. அதே சமயம் எனது ரசிகர்களையும் என்னால் ஏமாற்ற முடியாது.
நான் அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. அதனால் எனது குரலை பாழாக்கிக்கொள்ள முடியாது. உடல்நலத்துடன் நான் இருக்க வேண்டும். நான் எப்படிப்பட்டவர்களை சந்திக்கவுள்ளேன் என்பது பற்றியெல்லாம் தெரியாது. ஆனாலும் அவர்கள் அனைவரையும் கடந்துச் செல்ல வேண்டும் என்றார்.
அவர் அப்போது சொன்னது, தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமாக உள்ளது. கரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க பலரும் முகமூடி அணிந்துள்ளார்கள். கிருமி தொற்று பற்றி பலமுறை ஜாக்சன் புலம்பியபோதும் பலர் அவரை கிண்டலடிக்கவே செய்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டு பாப் உலகில் ஜொலித்த நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சன், 2009ஆம் ஜூன் மாதம் 25ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.