லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'.
இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு வந்த வருமான வரித்துறை அலுவலர்கள், விஜய்யை தங்களுடன் அழைத்துச் சென்று, சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனையிட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து விஜயின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர், படப்பிடிப்பு நடைபெற்று வந்த இடத்தில் தினந்தோறும் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், வருமான வரி சோதனை முடிந்து நெய்வேலியில் இருந்த படப்பிடிப்புத் தளத்திற்கு மீண்டும் திரும்பிய விஜய், அங்கிருந்த வேன் மீது ஏறி, தனக்கு ஆதரவளித்து அங்கு குவிந்திருந்த ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களை நோக்கிக் கையசைத்து, அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து இந்த செல்ஃபி புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. அது மட்டுமல்லாது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் '#ThalapathyVIJAYselfie' என்ற ஹேஷ்டேக்குடன் அப்புகைப்படத்தை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த செல்ஃபி புகைப்படம் இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவு என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் புகைப்படம் ஒன்று இது போன்ற சாதனையை செய்திருந்தது.
இந்நிலையில், அச்சாதனையைப் பின்னுக்கு தள்ளி, விஜய்யின் இந்த செல்ஃபி புகைப்படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. "#INDIAsMostRTedVIJAYSelfie" என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.