சென்னை: தளபதி விஜய் - விஜய்சேதுபதி என பலர் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு சிறப்பு நாளாகக் கருதப்படும் இன்று நிறைவுபெறுகிறது.
இந்தப் படத்தில் விஜய், ஜேம்ஸ் துரைசாமி என்ற புரொபோசர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஷிவமோகா, நெய்வேலி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் லீப் ஆண்டாக 2020 இருப்பதால், இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் கூடுதலாக ஒரு தேதி கணக்கில் கொள்ளப்படும். அதன்படி ஸ்பெஷல் தேதியாகக் கருதப்படும் 29ஆம் தேதி தனது 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்கிறார் தளபதி விஜய்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதையடுத்து படத்திலிருந்து தளபதி விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
'மாஸ்டர்' படத்தில் விஜய்சேதுபதி வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக விஜய் - விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள் படத்தில் தெறிக்கவிடும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
படத்தில் நடிகை மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், இனி வரும் நாள்களில் படத்தின் பாடல், ட்ரெய்லர் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.