சென்னை : தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் மனோரமா. இவரது நடிப்பில் வெளியான அனைத்து கதாபாத்திரங்களும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.
மன்னார்குடியில் பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958ஆம் ஆண்டு வெளியான "மாலையிட்ட மங்கை" திரைப்படத்தில் அறிமுகமானார்.
கதாநாயகியாக நடித்த திரைப்படம்
மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி". மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்தத் திரைப்படம்.
மனோரமாவை சினிமாவில் ஆச்சி என்றுதான் அழைத்து வந்துள்ளனர். ஏனென்றால் இவர் ஏற்று நடித்த ஆச்சி கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று கொடுத்தது.
1960களாக இருந்தாலும், 2000த்துக்கு பிறகான காலம் ஆனாலும் மனோரமா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் கதாபாத்திரங்கள்.
ஜில் ஜில் ரமாமணி
குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி மற்றும் பத்மினி இணைக்குச் சற்றும் குறைவில்லாத கதாபாத்திரமாக 'ஜில் ஜில் ரமாமணி' என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டைப் பெற்றார்.
மனோரமாவுக்கு பிறகு நகைச்சுவை நடிகைகளுக்கென்று ஒரு தனி அடையாளம் உருவானது. 1967 முதல் 2016 வரையுள்ள காலகட்டத்தில் பெரும்பாலும் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய நான்கு பேருடனும் நாடகங்கள், திரைப்படங்களில் மனோரமா நடித்துள்ளார்.
கின்னஸ் சாதனை
இவர்கள் நான்கு பேர் மட்டுமல்லாமல் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்டிஆர் உடனும் மனோரமா நடித்துள்ளார். தமிழ் தவிரத் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் படங்களில் நடித்து மனோரமா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கலையுலக பின்புலம் எதுவும் இல்லாமல் வந்த மனோரமா நாடகங்கள் , திரைப்படங்கள், தொலைக்காட்சி எனப் பல தளங்களிலும், நடிப்பு, பாடல் எனப் பல அம்சங்களில் நீங்காத முத்திரை படைத்தார்.
இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக பெரிதாக நடிக்கவோ, விழாக்களில் கலந்து கொள்ளவோ முடியாத மனோரமா, 2015 அக்டோபரில் காலமானார். இவரது 6ஆவது நினைவுத் தினம் இன்று.
இதையும் படிங்க : 'ப்ளூ சட்டை மாறன் சினிமாவுக்கு தேவையான தாதா' - இயக்குநர் வேலு பிரபாகரன்!