கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்தியாவில் தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளதால் பொருளதாரமும் தொய்வடைந்து உள்ளது.
அனைத்து வித படப்பிடிப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் நிதியுதவியும் பொருட்கள் வழங்கியும் ஆதரவளித்து வருகின்றனர். சமீபத்தில் மலையாள திரைத்துறையில் உள்ள தினசரி கூலித் தொழிலாளர்களுக்கான நிதியுதவிக்கு மோகன் லால் ரூ 10லட்சமும் மஞ்சுவாரியர் ரூ.5 லட்சமும் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு திருநங்கைகளுக்கென த்வயா (Dwaya) என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு நடிகை மஞ்சு வாரியர், அரிசி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதை பிரபல திருநங்கை மேக்கப் கலைஞர் ரெஞ்சு ரெஞ்சிமர் (Renju Renjimar) பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரெஞ்சு பதிவில், தேசிய ஊரடங்கால் வேலையில்லாமல் திருநங்கைகள் கஷ்படுவதை மஞ்சு வாரியர் அறிந்துள்ளார். இதுகுறித்து அவர், பேஸ்புக் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது மஞ்சு திருநங்கைகளின் நலம் குறித்து விசாரித்தார். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்று கேட்டார். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் உணவு கிடைப்பதில் சிரமப்படுகிறோம் என்று தெரிவித்தேன்.
உடனே மஞ்சுவாரியர் 50 திருநங்கைகளுக்கான உணவு வழங்குவதற்கு நிதியுதவி செய்ய தாயாராக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அதற்கு எவ்வளவுவாகும் எனக் கேட்டார். நான் கிட்ட தட்ட ரூ 35 ஆயிரம் என கூற பத்து நிமிடத்தில் எனது வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிவிட்டார். மேலும் எங்களுக்கு தேவையான மளிகை பொருள்களும், பிற அத்தியாவசிய பொருள்களையும் வழங்கினார் என்று பதிவிட்டுள்ளார்.