2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சைக்கலாஜிக்கல் திரில்லர் வகைப் படமான ‘அஞ்சாம் பாதிரா’ மலையாளத்தில் வெளியானது. மிதுன் மேனுவல் தாமஸ் இயக்கித்தில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் குஞ்சகோ போபன், உன்னி மாயா, ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்தை ரிலையன்ஸ், ஆஷிக் உஸ்மான், ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளன.
இது குறித்து ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஷிபாசிஷ் சர்க்கார் கூறுகையில், "மக்களை இருக்கையின் விளிம்பில் உட்கார வைக்கும் திரில்லர் படங்களில் அஞ்சாம் பதிராவும் ஒன்று! உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக இந்தத் திரில்லர் படத்தை ரீமேக் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஏபி இன்டர்நேஷனல் நிர்வாக பங்குதாரர் சஞ்சய் வாத்வா, "மலையாள திரையுலகிலிருந்து இந்த அற்புத ரத்தினத்தை உலகப் பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
ஏற்கனவே தடம், கைதி, ஜெர்சி, ஹிட் ஆகிய தென்னிந்திய படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.