தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும், ஸ்டைலிஷ் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு. திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சமீபத்தில் அவரின் இரண்டாவது திரைப்படமும் அப்போதைய சூப்பர்ஹிட் படமுமான ’முராரி’ வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து சமூக வலைதளங்களில் மகேஷின் ரசிகர்கள் ஹாஷ் டேக் மூலம் ட்ரெண்டாக்கி மகிழ்ந்தனர்.
மேலும் திரையுலகில் தற்போது பயோபிக் பாணி திரைப்படங்கள் எடுக்கப்படுவது ட்ரெண்டாகியுள்ளதால், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவரது பயோபிக் படத்தையும் திரையில் காண ஆர்வமுடன் காத்திருந்து வந்தனர்.
இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் எந்த நடிகர் அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ”நான் மிகவும் சாதாரணமான, எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். எனவே என் வாழ்க்கைக் குறித்த பயோபிக் படம் நிச்சயம் திரையுலகில் எடுபடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் காதல் மனைவியுடன் ஒரு நல்ல படத்தைக் கண்டுகளிப்பதே தன்னைப் பொருத்தவரை ஒரு சிறந்த ’டேட்’ என்றும் மகேஷ்பாபு தெரிவித்தார்.
”நீங்கள் ஒருநாள் கண்விழிக்கும் போது முதலமைச்சராக இருப்பீர்களானால் என்ன செய்ய விரும்புவீர்கள்?” என்ற கேள்விக்கு, ”எனக்குத் தெரியவில்லை... ஆனால் கடவுள்தான் அந்த மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
திரையுலக நண்பர்களுடன் ஒரு சுவாரஸ்யமான பயணம் மேற்கொள்ள விரும்பினால் யாருடன் செல்வீர்கள் என்ற கேள்விக்கு, சரண், தரக் மற்றும் நடிகர் சிரஞ்சீவியுடன் பயணிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘ஹே ராம்’ விடுத்த எச்சரிக்கை உண்மையாகிறது - கமல்ஹாசன்