பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷேராஃப், வாணி கபூர் ஆகியோர் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் ‘வார்’. இரு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், கபூர் நடிப்பில் உருவாகியுள்ள வார் திரைப்படம் உலகம் முழுவதிலும் அக்டோபர் 2ஆம் தேதி(நாளை) வெளியாகவுள்ளது.
சுமார் 172 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. எனவே இப்படத்தை இணையதளங்களில் வெளியிட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், ‘வார்’ திரைப்படத்தை 2,000 இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.