ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா இயக்கத்தில் வெளியான படம் 'தர்பார்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனையடுத்து, மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் உள்ளூர் தனியார் கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று நள்ளிரவு இப்படத்தை ஒளிபரப்பு செய்தது. ஒளிபரப்பு செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை அப்பகுதி மக்கள் லைக்கா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தது.
அந்தப் புகாரில், ஜனவரி 9ஆம் தேதி 2020 வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தை மதுரை அருகில் இயங்கும் சரண்யா கேபிள் டிவி நெட்ஒர்க் நிறுவனம் சட்ட விரோதமாக ஜனவரி 12 ஆம் தேதி ஒளிபரப்பியுள்ளது.
இந்தச் செயல் லைக்கா நிறுவனத்திற்கும் மதுரை விநியோகஸ்தருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை சீரழிப்பதாகவும் உள்ளது.
சட்ட விரோதமான இந்த ஒளிபரப்பை லைகா நிறுவனம் கண்டிப்பதுடன், காவல் துறை ஆணையர் இது குறித்து கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.